Sunday, April 16, 2023

உபியில் முன்னாள் எம்பி உட்பட இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.



இறைவனின் திருப்பெயரால்..

உபியில் முன்னாள் எம்பி உட்பட இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

உத்திர பிரதேச மாநிலத்தில் முன்னாள் எம்பி அதீக் அகமதும் அவரது சகோதரர் அஷ்ரபும் இந்துத்துவ சமூக விரோதிகளால் கொடூரமான முறையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதை வன்மையாகக் கண்டிக்கின்றது.

சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் காவல்துறையினர் முன்னிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பார்ப்பதற்கே கோரமாகவும் கொடூரமாகவும் அக்காட்சிகள் அமைந்துள்ளன.

 துப்பாக்கியால் சுட்டவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடுகின்றனர்.

அதீக் அகமது குற்றப்பின்னணி உள்ளவர் என்றும் அவர் மீது பல வழக்குகள் உள்ளது என்று கூறப்பட்டாலும் இத்தகைய படுகொலையை ஏற்க முடியாது. 

அவர்கள் தவறு செய்திருப்பின் சட்டப்படி தண்டிக்கப்படுவதுதான் சரியான நடைமுறையாகும்.

 அதற்கு பதிலாய் ஈவு இரக்கமின்றி இந்துத்துவ சமூக விரோதிகள் சுட்டுக் கொல்வதை ஏற்க முடியாது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரன் ஆகிவிட்டால் பிறகு சட்டம், காவல்துறை , நீதிமன்றங்கள் இவைகளெல்லாம் எதற்கு?

பாஜகவின் யோகி ஆட்சி புரியும் உத்திரபிரதேச மாநிலத்தில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

சமூக விரோதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற அளவுக்கு துப்பாக்கிக் கலாச்சாரம் உபியில் பெருகிவருகின்றது.
 அவர்களின் கரங்களுக்கு துப்பாக்கிகள் எப்படி வந்தன.

பொது வெளியில் காவல்துறை மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையிலேயே இத்தகைய வன்முறை வெறியாட்டம் அரங்கேற்றப்படுகிறது என்றால் உபியில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்தகைய காரியங்களை வன்மையாகக் கண்டிப்பதுடன் நாட்டில் வன்முறைத் தீயைப் பற்ற வைத்து அதன் கதகதப்பில் குளிர்காய நினைக்கும் சமூக விரோதிகளையும் அவர்களை ஊக்குவிக்கும் தீய சக்திகளையும் நீதிமன்றங்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு: 

ஆர்.  அப்துல் கரீம். 

பொதுச்செயலாளர். 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Saturday, September 17, 2022

வட மாநிலங்கள் பாணியில் தமிழகத்திலும் மதவெறி தாக்குதல் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனம்

சுற்றறிக்கை : 76/ 2022 தேதி - 17.09.2022 இறைவனின் திருப்பெயரால்… கண்டன அறிக்கை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... வட மாநிலங்கள் பாணியில் தமிழகத்திலும் மதவெறி தாக்குதல் _தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடுமையான கண்டனம். வட மாநிலங்களில் தான் மதவெறி கொண்டு சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமியர்களை தாக்க கூடிய சம்பவங்கள் அரங்கேறும். தற்போது சமூக நீதி ஆட்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்பது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னை கோடம்பாக்கம் பகுதியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய சிறுவனை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் தாக்கியுள்ளார். தாக்கும் நேரத்தில் உனக்கு தொப்பி ஒரு கேடா என்று தாக்கியது சமூகத்தில் மிகப்பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அவனுடைய ஆடைகள் கிழியும் அளவிற்கு தாக்கியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் மீது வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறை ஆய்வு செய்து வருகிறது. அமைதி பூங்கா தமிழகத்தை மதவெறி தேசமாக மாற்ற துடிக்கும் இது போன்ற சங்பரிவார சிந்தனை கொண்டவர்களை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். சங்பரிவார கும்பலின் இத்தகைய மதவெறிச் செயல் துவக்கத்திலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இவர்கள் மீது எடுக்கும் நடவடிக்கை அடுத்து இந்த செயல் செய்ய நினைக்க கூடியவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். இச்செயல் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, ஆர். அப்துல் கரீம். மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Thursday, August 25, 2022

நபிகளார் குறித்து அவதூறு பேசிய தெலுங்கானா எம்.எல்,ஏ ராஜாசிங் உடனடியாக ஜாமீனில் விடுதலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.

இறைவனின் திருப்பெயரால்.. நபிகளார் குறித்து அவதூறு பேசிய தெலுங்கானா எம்.எல்,ஏ ராஜாசிங் உடனடியாக ஜாமீனில் விடுதலை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். கோடான கோடி இஸ்லாமியர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய நபிகள் நாயகத்தைப் பற்றி தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ ராஜாசிங் என்பவன் அவதூறாகப் பேசியுள்ளான். பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தால் கைது செய்யப்பட்ட ராஜாசிங் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளான். உலகம் உற்று நோக்கும் பிரச்சனையாக இது மாறிவிடக்கூடாது என்பதற்காக பாஜகவிலிருந்து அவன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளான் என்ற கண்துடைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகளார் குறித்து அவதூறு கருத்தைக் கூறி உலகை உலுக்கும் மிகப்பெரும் பிரச்சனையாக அது மாறிய போதும் இப்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை. இது போன்று இஸ்லாத்தைப் பற்றி அவதூறு கூறி வன்முறையைத் தூண்டுவோருக்கு நம்நாட்டில் நியாயமான தண்டனை கிடைப்பதே இல்லை. அவர்களில் பலர் மீது வழக்கு, கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. மிகச்சில நேரங்களில் இவை மேற்கொள்ளப்பட்டாலும் அது குற்றவாளிகளை காப்பாற்றும் கண்ணோட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எந்த மதத்தைப் பற்றி அவதூறு செய்யப்பட்டாலும் அது கண்டிக்கப்படவேண்டிய தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் தான். இருப்பினும் இந்துமதத்தைப் பற்றி ஒருவர் விமர்சித்தால் அவர்கள் மீது கடும் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றது. ஒன்றிய அரசு குறித்த விமர்சனத்தை ஒருவர் முன்வைத்தால் அவர் மீது தேச விரோத வழக்குகள் போன்ற கடுமையான வழக்குகள் போடப்பட்டு ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளப்படுகின்றனர். ஆனால் இஸ்லாத்தைப் பற்றியோ, இஸ்லாமியர்களைப் பற்றியோ, நபிகள் நாயகம் பற்றியோ ஒருவர் அவதூறு கூறினால் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இஸ்லாத்தைப் பற்றி யார் வேண்டுமானாலும் அவதூறு கூறலாம். அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலையாக உள்ளது. இது கடும் கண்டனத்திற்குறிய செயலாகும். பூமிப் பந்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இந்திய தேசம். இத்தகைய மதவாதிகளால் மதச்சார்பின்மை எனும் தன் அழகிய அடையாளத்தை இழந்து வருகின்றது. குழப்பம் கொலையை விடக் கொடியது என்கிறது திருமறைக் குர்ஆன். அமைதியான முறையில் வாழக்கூடிய சமூக மக்கள் மத்தியில் சமூக விரோதிகள் குழப்பம் ஏற்படுத்தும் கருத்தைக் கக்குவது நம் நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல. மதத்தால் வேறுபட்டிருப்பினும் அண்ணன், தம்பிகளாக வாழும் இந்திய நாட்டில் இத்தகையவர்களை வளர விடுவது நல்லதல்ல . இத்தகைய குற்றவாளிகள் மீது கடும் வழக்குகள் போடப்பட வேண்டும். அவர்கள் சிறைக் கொட்டத்தில் அடைக்கப்பட்டு தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா அமைதியான தேசமாக இருக்கும் என்பது தான் நடுநிலையாளர்களின் பார்வையாக உள்ளது. எனவே நபிகளார் குறித்து அவதூறு பேசிய ராஜாசிங் மற்றும் நுபுர் சர்மா ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது. இப்படிக்கு: ஆர். அப்துல்கரீம். பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Tuesday, August 16, 2022

பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடும் கண்டனம்.

இறைவனின் திருப்பெயரால்.... பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகள் விடுதலை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம் 2002 ஆம் ஆண்டு மோடி குஜராத்தின் முதல்வராக இருந்த நேரத்தில் இஸ்லாமியர்களுக்கெதிரான மிகப்பெரிய கலவரம் அங்கு கட்டவிழ்க்கப்பட்டது. பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் உட்பட ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் ஈவு இறக்கமின்றி கொல்லப்பட்டார்கள். கோடிக் கணக்கான முஸ்லிம்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வரலாற்றில் இந்த நிகழ்வை உலகம் என்றும் மறவாது. இந்த கலவரத்தின் போது நடைபெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் தான் பல்கீஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரம். அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்தவர் தான் பல்கீஸ் பானு 2002 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி இவரையும் இவரது குடும்பத்தாரையும் இந்து வெறியர்கள் கடுமையாகத் தாக்கி, இவரது குடும்பத்தினர் ஏழு பேர்களை படுகொலை செய்தனர். 5 மாத கர்ப்பிணியாக இருந்த பல்கீஸ் பானுவை கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.அவரின் நான்கு வயதுக் குழந்தை தரையில் அடித்துப் படுகொலை செய்யப்பட்டது. கேட்பவரின் இரத்தத்தை உறையச் செய்கின்ற இதயத்தை நடுங்கச் செய்கின்ற சம்பவங்கள் இவை. மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் 2008 ஆம் ஆண்டு 11 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்சநீதிமன்றமும் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது. 2004 முதல் 2022 வரை சிறையில் இருந்த இக்குற்றவாளிகள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரது தண்டனையை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்க குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. இதன்பிறகு தான் 11 குற்றவாளிகளையும் குஜராத் அரசு விடுவித்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப் பட்டவர்களின் நெஞ்சங்களில் ஈட்டியைப் பாய்ச்சியுள்ளது குஜராத் அரசு. குஜராத் அரசு விடுவித்துள்ள இக்குற்றவாளிகள் சாதாரண குற்றவாளிகள் அல்ல. சிறையில் வாழ்வதற்கே தகுதியற்றவர்களும் மரண தண்டனைக்குரியவர்களுமான இந்த மனித மிருகங்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பது இந்திய தேசத்திற்கே அவமானகரமான செயலாகும். பெண்களின் நலம் நாடும் அரசு என மார்தட்டிக் கொள்ளும் மோடி அரசுக்கு பல்கீஸ் பானு பெண்ணாகத் தெரியவில்லையா? அவருக்கு ஏற்பட்ட கொடுமைகள் கொடுமைகளாகத் தெரியவில்லையா? சிறுமி ஆஷிபா விஷயத்திலும் இவர்களின் உண்மை முகம் வெளிப்படத்தானே செய்தது. விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் ஆரத்தி எடுத்து வரவேற்கப் படுவதும், இனிப்புகள் வழங்கி இவ்விடுதலையைக் கொண்டாடுவதும் நம் தேசத்திற்கே தலைகுனிவாகும். இவர்கள் ஆயுள்தண்டனைக்குரியவர்கள் அல்ல. இவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தால் இனி இது போன்ற குற்றங்களைச் செய்ய எவரும் துணிவு பெற மாட்டார்கள். ஆனால் இவர்களை விடுவித்திருப்பதினால் இனியும் கொலை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை செய்யலாம் என்ற நிலைக்கே குற்றவாளிகள் வருவார்கள். இதனால் குற்றங்கள் பெருகும். இத்தகையவர்களை அடக்கத் தவறிய நீதிமன்றங்கள் மீதும் அரசுகள் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை பறிபோகும். குஜராத்தில் இவர்களை விட குறைவான குற்றம் புரிந்தவர்கள் கூட இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் வாழும் சூழலில் ஈவு இறக்கமற்ற முறையில் நடந்து கொண்ட இக்கயவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. இப்படிக்கு. ஆர். அப்துல்கரீம். பொதுச்செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

Wednesday, June 29, 2022

உதய்பூர் டெய்லர் படுகொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்:

சுற்றறிக்கை: 59/2022 தேதி: 29/06/2022 இறைவனின் திருப்பெயரால்... உதய்பூர் டெய்லர் படுகொலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்: சமீபத்தில் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தும் நோக்கில் பாஜகவின் நுபுர் சர்மா என்பவர் பேசியிருந்தார். அதைக்கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தேசமெங்கும் அமைதியான முறையில் நடைபெற்றன. இந்த நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் என்ற பகுதியில் கன்னையா லால் என்பவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கன்னையா லால் என்ற தையல் கடைக் காரர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்தக் கொலையை அறங்கேற்றிய காட்டு மிராண்டிகள் அதை வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர். கொலையாளிகள் இருவரும் உடனே கைது செய்யப்பட்டனர். ஒரு மதத்தை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக்கள் பதிவிட்ட கன்னையா லால் என்பவருடைய செயல் ஏற்புடையதல்ல என்றாலும் அவரை கொடூரமாக கொலை செய்திருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும். எந்தக் கோரிக்கையாக இருந்தாலும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு உட்பட்டு அமைதி வழியில் தான் போராட வேண்டும் என்பது தான் இந்திய முஸ்லிம்களின் நிலைப்பாடாகும். இந்தக் கொலையாளிகளோ முட்டாள் தனமாக இக்காரியத்தை அறங்கேற்றியுள்ளனர். ஈவு இறக்கமற்ற இது போன்ற செயல்களை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது. இந்திய முஸ்லிம்களும் இதைஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் தங்களின் வலுவான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்திய தேசத்தின் இறையாண்மையையும், ஒருமைப் பாட்டையும் சீர்குலைக்கும் எவ்வித செயல்களையும் இந்திய இஸ்லாமியர்கள் ஏற்க மாட்டார்கள். ஒரு மனிதரைக் கொலை செய்பவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவரைப் போன்றவராவார். ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போன்றவராவார். (அல்குர்ஆன்: 05: 32) என்று இஸ்லாம் கூறுகிறது . மதத்தின் பெயரைச் சொல்லி இது போன்ற கொடுஞ் செயல்களை யார்செய்தாலும் ஜாதி மத வேறுபாடின்றி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசு இரும்புக்கரம் கொண்டு அவர்களை அடக்க வேண்டும். உதய்பூர் படுகொலையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிப்பதுடன். இந்தப் படுகொலையை அரங்கேற்றிய இரு கொலையாளிகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டுமென நீதித்துறையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கின்றது இப்படிக்கு. ஆர். அப்துல்கரீம். பொதுச் செயலாளர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Monday, June 13, 2022

இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இடிக்கப்படும் வீடு!! தொடரும் பாஜகவின் தேச விரோத செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

சுற்றறிக்கை: 55/2022 தேதி: 13/06/2022 இறைவனின் திருப்பெயரால்... இஸ்லாமியர்கள் மீது துப்பாக்கிச்சூடு! இடிக்கப்படும் வீடு!! தொடரும் பாஜகவின் தேச விரோத செயல்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம். சமீபத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகளாரை இழிவுபடுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருந்தனர். உள்நாட்டிலும் ,உலக நாடுகளிலும் கடும் எதிர்வலைகளை இது ஏற்படுத்தியது. இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டு பயந்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்று பாஜக பாசாங்கு செய்து வருகிறது. அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்ட பிறகும் எந்த கைது நடவடிக்கையும் இது வரை மேற்கொள்ளப்படவில்லை. இதைக் கண்டித்து தன்னெழுச்சி மிக்க போராட்டங்கள் தேசமெங்கும் நடந்து வருகின்றன. இச்சூழ்நிலையிலும் நுபுர் சர்மாவை கைது செய்யாமல் அவர் குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கி வரும் பாஜக. அறவழியில் போராடி வரும் அப்பாவிகள் மீது தாக்குதல்களை தொடுத்து வருகின்றது. ஜார்கண்ட் துப்பாக்கிச் சூடு: ஜார்கண்டில் நடைபெற்று வந்த அறவழிப் போராட்டத்தை சில விஷமிகள் கலந்து கொண்டு வன்முறையாக மாற்ற அதில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 16 வயது சிறுவன் முத்தஸ்ஸிர் அநியாயமான முறையில் சுட்டுக் கொல்லப்படுள்ளான். அதே போன்று 22 வயதே நிரம்பிய ஸஹீல் அன்சாரி என்ற இளைஞரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர்களின் குடும்பத்தார் கதறியழும் காட்சிகளைப் பார்க்கும் கண்கள் குளமாகின்றன. தன் வாய்க்கொழுப்பால் நபிகளார் பற்றிப் பேசி நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய நுபுர் ஷர்மாவிற்கு புகலிடம் வழங்கி விட்டு அறவழியில் போராடிய அப்பாவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர் வீடுகளை இடிக்கும் ஃபாசிச பாஜக:* நியாயத்திற்காக குரல் எழுப்பிப் போராடியவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதுடன் பலரை கைது செய்தும் அவர்களின் வீடுகளையும் புல்டோசர்களைக் கொண்டு இடித்துத் தரை மட்டமாக்கும் இரக்கமற்ற இழி செயலை பாஜக மேற்கொண்டு வருகின்றது. நம் ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் என்பவை சாதாரணமானவையே. இதை ஒடுக்க எதற்கு புல்டோசர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவும் அறவழியில் நடைபெற்று வந்த போராட்டங்கள் தான் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளன. கடந்த காலங்களிலும் ஷாஹின் பாக் உள்ளிட்ட பல அறவழிப் போராட்டங்கள் வன்முறையாக மாற்றப்பட்டுள்ளன. போராடுபவர்களின் வீட்டை இடித்து விட்டால் அவர்கள் வீட்டிலேயே முடங்கிவிடுவார்கள். அவர்களின் குரல் ஓய்ந்து விடும் .என்பது தான் பாஜகவின் திட்டம். ஆனால் பாஜகவின் இத்தகைய அடக்கு முறைகளால் மக்கள் இன்னும் வீறு கொண்டு எழு வார்களே தவிர ! அவர்களின் குரல் ஓயப்போவதில்லை! வீடு இடிப்புச் செயலை நியாயப் படுத்துவதற்காக அனுமதி பெறாமல் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தான் இடிக்கப்பட்டுள்ளன என யோகி அரசு விஷம் கக்கியிருக்கின்றது. அனுமதி பெறாமல் விதிமீறிக் கட்டப்பட்ட கட்டடிடங்களில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் வசிக்கின்றனரா? மற்ற சமுதாயத்தார் யாரும் அவ்வாறு இல்லையா? அவர்களின் குடியிருப்புகளை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாமியர்களின் வீடுகளை மாத்திரம் இடித்துத் தள்ளி இருப்பது பாஜகவுக்கெதிராக அவர்கள் போராடினார்கள் என்ற காரணத்திற்குத் தானே தவிர. அனுமதி இன்றி கட்டிடம் கட்டியதற்காக அல்ல. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்: தமிழக முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இத்தகைய கொடுமையை கண்டும் இன்னும் வாய் திறக்கவில்லை. இவ்வளவு பெரிய அநியாயம் நம்நாட்டில் அரங்கேறி இருக்கிறது. நாடு தழுவிய போராட்டங்களை இந்த அரசியல் கட்சித் தலைவர்கள் அறிவித்து இருக்க வேண்டாமா? கள்ள மௌனம் சாதிப்பதின் மூலமாக பாஜகவின் இஸ்லாமிய விரோத போக்கிற்கு இவர்கள் ஒத்து ஊதுவதாகவே நமக்குத் தோன்றுகிறது. இதுவும் ஜனநாயகப் படுகொலையின் ஒரு அங்கமே. இது போன்ற அநியாயங்களை அரங்கேற்றி தொடர்படியாக இஸ்லாமிய சமூகத்தை வஞ்சித்து, தேசத்தை படுகுழியில் தள்ளி வரும் பாஜகவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது. அநீதி இழைக்கப்பட்டவனின் பிராத்தனைக்கு பயந்து கொள். ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: புஹாரி 1496. இப்படிக்கு: ஆர். அப்துல்கரீம். பொதுச் செயலாளர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

Monday, May 16, 2022

கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

 கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு - 1991 வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு மாற்றமாக மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


பாபர் மஸ்ஜிதை போலவே நீதிமன்றம் மூலமாக வாரணாசி கியான்வாபி மசூதியையும் பறிக்க சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


அதற்காகவே தொடர்ச்சியாக நம்பிக்கையின் அடிப்படையில் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற வழக்கறிஞர் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக ஒரு மனுவை தாக்கல் செய்கின்றார். அதில் கியான்வாபி மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டதா? என்று உண்மையைக் கண்டறிய அப்பள்ளி அமைந்திருக்கும் பகுதியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.


சுபாஷ் நந்தன் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் சிவலிங்கம் இருந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.


வாரணாசியில் உள்ள நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


கியான்வாபி மசூதிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இடையில் உள்ள மேற்கு பக்க சுவரின் வெளிப்புறத்தில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கின்றது. இதை, காசி விஸ்வநாதர் கோயிலின் முக்தி மண்டபத்தில் இருந்தபடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். இந்நிலையில், அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி கோரி ராக்கி சிங், மஞ்சு வியாஸ், சீதா சாஹு, லட்சுமி தேவி,  ரேகா பத்தா ஆகிய ஐந்து பெண்கள் மூலமாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.


மசூதி வளாகத்தில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்படுவதில் உள்ள உண்மையைக் கண்டறிய கியான்வாபி மஸ்ஜிதை கள ஆய்வு நடத்த குழு அமைத்தது நீதிமன்றம்.


பாபர் மசூதி விஷயத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருந்த முஸ்லிம்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து பாபர் மசூதி முஸ்லீம்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டது.  அதே நிலை கியான்வாபி மசூதியில் ஏற்பட்டு விடக்கூடாது என்று முஸ்லிம்கள் தொடர் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க நீதிமன்றமே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. 


1991 வழிபாட்டு தலங்கள் சட்டம், (The Places Of Worship Act, 1991), பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி  நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 க்கு முன்னர் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் இச்சட்டம் கூறுகிறது.


ஆக்கிரமிக்கப் பட்ட இடமாக இருந்தால் கூட வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் இது ஆக்கிரமிக்கப் பட்ட இடம் இல்லை என்று தெளிவாக தெரிந்தும் மத மோதலை ஏற்படுத்த வேண்டும் என்று சங் பரிவார சிந்தனை கொண்டவர்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.


மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மத வெறி அரசியல் நடத்தும் சங் பரிவார சிந்தனை கொண்டவர்களின் இந்த முயற்சிகளுக்கு நீதித்துறை தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் எண்ணமாக உள்ளது. 


இப்படிக்கு


ஆர். அப்துல் கரீம்.


பொதுச் செயலாளர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்