Tuesday, March 15, 2022

கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


இறைவனின் திருப்பெயரால்..

ஹிஜாப் தடை செல்லும்: கர்நாடக நீதிமன்றத்தின் காவிமயத் தீர்ப்பிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


ஹிஜாப் தடை செல்லும் என கர்நாடகா நீதிமன்றம் வழங்கிய அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.


உலகஅளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட    ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை  கர்நாடகா உயர்நீதிமன்றம் இன்று (15.03.2022) வெளியிட்டது.


ஏற்கனவே எரிந்து நாசமாகி வரும் இந்தியாவின் மதச்சார்பின்மை மீது ஒரு கேலன் பெட்ரோலை ஊற்றியிருக்கிறது  கர்நாடகா உயர்நீதிமன்றம்.


ஹிஜாப் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை எனவும் எனவே ஹிஜாபை முஸ்லிம்களின் அடிப்படை உரிமை என எடுத்துக் கொள்ள முடியாது எனவும் இதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது செல்லும் எனவும்  விஷம் கக்கியிருப்பதுடன் ஹிஜாபுக்கு ஆதரவாக தொடுக்கப்பட்ட சுமார் 140 ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது,


ரிதுராஜ் அவஷ்தி, ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீர்ஷித் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு தான் இந்த அநியாயத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றது.  


காவி அணியும் சங்பரிவாரத்தினர் கூறித்திரியும் நச்சுக் கருத்துக்களைத்தான் கருப்புச் சட்டை அணிந்த இந்நீதிபதிகள் தங்கள் வாய்களால் வாந்தி எடுத்துள்ளனர்.


இது ஒரு காவிமயமான தீர்ப்பு என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. இந்த தீர்ப்பைத் தான் இவர்கள் தரப்போகிறார்கள் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். 


இது போன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான தீர்ப்புகள் பன்னெடுங்காலமாகவே இந்திய நீதிமன்றங்களால்  சொல்லப்பட்டு வருகிறது.


450 ஆண்டு பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜித் இடம் இராமருக்கே சொந்தம் என்று ஒரு நீதிபதி அபத்தம் நிறைந்த தீர்ப்பளித்ததும்  , இந்த அநியாயத் தீர்ப்பை உச்சரித்த நீதிபதிக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டதும் நாம் கேள்விப்பட்டது தானே!


முத்தலாக் பிரச்சனை , குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்த மசோதா என்ற எந்த அநியாயச் சட்டங்களையும் தடுத்து நிறுத்தாத நீதிபதிகள் வாழும் இந்தியாவில் இது போன்ற தீர்ப்புகள் வருவது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல.


இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்று திருமறைக் குர்ஆனிலும் நபிகள் நாயகத்தின் போதனைகளிலும் வந்துள்ளது. 


நபியே! தமது தலைமுக்காடுகளைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 33: 59)


நபியின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! (நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறுக:) அவர்கள் தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின்மீது போட்டுக் கொள்ளட்டும். ! எனும் திருக்குர்ஆனின் (24:31 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழ்ஆடை(யில் ஒரு பகுதி)யைக் கிழித்து அதனைத் தலைமுக்காடாக ஆக்கி(மறைத்து)க் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல்  : புகாரி (4758



இவை போன்ற பல செய்திகளில் ஹிஜாப் கட்டாயம் என்பது இஸ்லாத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ள நிலையில் 

அது இஸ்லாத்தில் கட்டாயமில்லை என்று இவர்கள் தீர்ப்பு கூறுகிறார்கள் எனில் இந்த நீதிபதிகளின் புத்திக் கூர்மையை என்னவென்று சொல்வது. 


ஆளும் பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் தரமாட்டோம். அவர்களை இங்கு நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்பதைத் தான் நீதிமன்றங்கள் மூலம் சொல்ல நினைக்கின்றனர்.


அரசியல் தனமான காவிச்சிந்தனை மிக்க இந்த அநியாயத் தீர்ப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிப்பதுடன் இந்திய முஸ்லிம்கள் இறைவனின் துணை கொண்டு இது போன்ற அநியாயங்களுக்கும் இதை அரங்கேற்றிவரும் காவிகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


இப்படிக்கு. 


ஆர்.  அப்துல் கரீம். 


பொதுச் செயலாளர்.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment