Wednesday, March 9, 2022

பெண்ணைக் காக்கும் ஹிஜாப்

இறைவனின் திருப்பெயரால்..


பெண்ணைக் காக்கும் ஹிஜாப்


ஈர்ப்புடன் படைத்த இறைவன்


இறைவன் எல்லா ஜீவராசிகளையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான். பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதனும் அவ்வாறே படைக்கப்பட்டுள்ளான்.


 மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட பருவத்தை அடையும் போது அவர்களுக்கான பாலியல் தேடல்கள்  மேலோங்குவது இயற்கையே.


இந்தத் தேவைகளை திருமணம் என்ற கண்ணியமான உறவின் மூலமே ஒரு ஆணும் பெண்ணும் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர தவறான வழிகளை நாடலாகாது என்று இஸ்லாம் எடுத்துரைக்கின்றது.


ஆணும் பெண்ணும் தன் வாழ்வில் ஒழுக்கம் பேணுவதற்கான எல்லா ஒழுக்க மாண்புகளையும் இஸ்லாம் வரையறுத்துள்ளது. 


 பார்வையை தாழ்த்துதல், நெறியுடன் பேசுதல் என்று இவை போன்ற போதனைகள் மூலம் அனைவரும் கற்புநெறியுடன் வாழ்வதற்கு இஸ்லாம் வகை செய்கின்றது.


அன்னியருக்கு முன்னால் கண்ணிய ஆடை:


ஒரு பெண் தன் உடலின் முகம், முன்கை, கால்பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆடவர்களை விட்டும் மறைத்துக் கொள்ள வேண்டும். இதுவே பெண்கள் கற்பொழுக்கம் பேணுவதன் முக்கிய அம்சமாகும். 


இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் நீர் கூறுவீராக! அவர்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தமது கற்பு நெறிகளைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ளட்டும். அவர்கள் (சாதாரணமாக) வெளியில் தெரிவதைத் தவிர தமது அலங்காரத்தில் வேறு எதையும் (அன்னியர்களிடம்) வெளிப்படுத்த வேண்டாம். தமது தலைமுக்காடுகளைத் தமது மேற்சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளட்டும். அல்குர்ஆன்: 24: 31


*கண்ணுக்கு இமை பெண்ணுக்கு ஹிஜாப்:*


பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடை அவர்களின் கற்புக்கு பெரும் பாதுகாப்பு என்று திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது.


நபியே ! தமது தலை முக்காடுகளைத் தொங்கவிட்டுக்  கொள்ளுமாறு உமது மனைவியருக்கும், உமது பெண் மக்களுக்கும், இறைநம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும் கூறுவீராக ! அதுவே அவர்கள் அறியப்படுவதற்கும், தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கும் மிகவும் ஏற்புடையது. அல்லாஹ் மன்னிப்பு மிக்கவனாகவும் நிகரிலா அன்பாளனாகவும் இருக்கிறான். அல்குர்ஆன்: 33: 59 


இஸ்லாம் கூறும் கண்ணிய ஆடையை அணியாத பெண்கள் அன்னிய ஆடவர்களால் பரிகசிக்கப்படுவதையும், பாலியல்  தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  கண்ணை இமை காப்பது போல் பெண்ணை ஹிஜாப் காக்கின்றது.


பர்தா ஆடையால் பரிபோகிறதா பெண்ணுரிமை.?


ஹிஜாப் ஆடை அணியச் செய்வதன் மூலமாக பெண்களின் உரிமையை இஸ்லாம் பறிப்பதாக சிலர் கருதுகின்றனர். பெண்களுக்காக குரல் கொடுப்போர் எவரும் இல்லாத காலகட்டத்திலேயே பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே பெண்களுக்கான உரிமையை நிலைநாட்டிய மார்க்கம் இஸ்லாம். அவர்களுக்கு சொத்துரிமை, கல்வி பெறும் உரிமை. திருமண உரிமை, விவாகரத்து உரிமை, வழிபாட்டு உரிமை என்று நியாயமான எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியது.

ஹிஜாப் அணியச் சொல்வது அவர்களின் பாதுகாப்பிற்காகவும், நல்லொழுக்கம் பேணுவதற்கும் தானே தவிர. அதில் எந்த உரிமை மறுப்பும் இல்லை.  பர்தா அணிவதால் ஒரு பெண்ணுக்கோ, ஒரு தேசத்திற்கோ எந்தப் பாதிப்பும் இல்லை . மாறாக பாதுகாப்புதான் உள்ளது. இதை அனைவரும் உணர வேண்டும்.


*ஹிஜாப் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை:*


நம் இந்திய நாடு பல மத, இன, மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட பரந்த நாடு எனவே தான் ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற தருணத்தில் இது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதச்சார்ப்பற்ற ஜனநாயக நாடாகக் கட்டமைக்கப்பட்டது. 


பலதரப்புமக்களில் எவருக்கும் பாதகம் ஏற்படா வண்ணம் அரசியல் சாசனச் சட்டமும் ஏற்படுத்தப்பட்டது.


 அதில் ஒவ்வொரு மதத்தவருக்கும் தேவையான உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன.


ஒவ்வொருவரும் தான் விரும்பும் மதத்தை கடைபிடிக்க, பரப்ப உரிமை உள்ளது.

 அரசியலமைப்புச் சட்டம் அத்தியாயம்  25


ஒரு அரசு எந்தக் குடிமகனையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடத்தின் அடிப்படையில் பாகுபாடாக நடத்தக்கூடாது . அரசியலமைப்புச் சட்டம் அத்தியாயம்: 15


சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், அவர்களின் மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவற்றை பாதுகாக்க அவர்களுக்கு உரிமையுண்டு. அரசியலமைப்புச் சட்டம் 29


இவ்வாறு தெளிவாக மதச்சார்பின்மை பற்றி கூறப்பட்டிருக்கும் போது இந்த சட்டங்கள் அப்பட்டமாக மீறப்பட்டு முஸ்லிம்களின் ஹிஜாப் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.  இதை ஏற்க முடியாது. 


முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கியிருக்கும் உரிமை. சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்லுரிக்கு வரக்கூடாது என்ற விவகாரத்தை ஒரு தேசவிரோதக் கும்பல் கிளப்பியிருக்கின்றது. 


முஸ்லிம்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சக்கூடியவர்கள் , ஹிஜாப் உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை.


 உரிமையை நிலைநாட்ட களம் கண்டு வரும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு இறைவன் வெற்றியை அளிப்பானாக.

No comments:

Post a Comment