அல்லாஹ்வின் திருப்பெயரால்….
09.04.2022 அன்று நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1. ஹிஜாப் குறித்த அநியாயத் தீர்ப்பு .
பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கர்நாடகா பாஜக அரசு தடை விதித்தது. இதை கண்டித்து தொடரப்பட்ட வழக்கில் அரசு தடை விதித்தது சரி என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரசியல் சாசனத்தையும், இஸ்லாத்தில் ஹிஜாப் குறித்து சொல்லப்பட்ட நெறிமுறைகளயும் புறந்தள்ளிவிட்டு மனம் போன போக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஹிஜாப் குறித்த (அநியாய) தீர்ப்பை வழங்கி உள்ளது.
இந்த அநியாய தீர்ப்பு இந்திய ஜனநாயகத்தை விரும்பக்கூடியவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பில் உள்ள சட்டத்திற்கு புறம்பான அம்சங்களையும், ஜனநாயக விரோத தன்மையையும் உலகம் முழுவதும் உள்ள ஜனநாயகத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் விரும்பக்கூடிய கோடிக்கணக்கான உள்ளங்களில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பாசிச பாஜக கொண்டு வரும் இது போன்ற அடக்குமுறைகளை கண்டு இஸ்லாமிய சமுதாயம் அஞ்சாது என்பதையும், சட்டத்தின் மூலம் இவைகளை முறியடிப்போம் என்பதையும் இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
2. மத வெறுப்பை உமிழும் கர்நாடக அரசு
ஹிஜாப் விவகாரத்தை தொடர்ந்து முஸ்லிம் வியாபாரிகள் கோயில் திருவிழாக்களில் கடை போடக்கூடாது என்று சொல்வதும், இறைச்சி கடைகளில் ஹலால் இறைச்சி வைக்க கூடாது என்று வன்முறை ஏற்படுத்துவதும், பள்ளிவாசலில் ஒலி பெருக்கி மூலம் பாங்கு சொல்லக்கூடாது என்று சொல்வதும்,
தொடர்ந்து மதத்தின் பெயரால் அத்துமீறல் செய்து வரும் கர்நாடக மாநில பாசிச பாஜக அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
3. அல் காய்தாவிற்கு கண்டனம்
இந்திய முஸ்லிம்கள் விஷயத்தில் அல் காய்தா தலையிடுவதாக ஒரு செய்தி பரவுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்திய முஸ்லிம்கள் விஷயத்தில் அல் காய்தா தலையிடுவதை ஒரு போதும் ஏற்க முடியாது. இச்செயலை தவ்ஹீத் ஜமா அத் வன்மையாக கண்டிக்கிறது.
4. பொது சிவில் சட்டம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் தாமி அறிவித்துள்ளார், இது இந்தியாவின் மதசார்பற்ற தன்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் எதிரானது. ஜனநாயகத்தை இது முற்றிலுமாக உருக்குலைத்து விடும். இதனால் உலக அரங்கில் இந்தியா தலைகுனிவை சந்திக்க நேரிடும்.
எனவே இதை உத்தரகாண்ட் அரசாங்கம் உடனே திரும்பி பெற வேண்டும் என்று இம் மாநில செயற்குழு வாயிலாக கேட்டு கொள்கிறோம்.
5. பித்அத் ஒழிப்பு மாநாடு
இன்ஷா அல்லாஹ் 2023 பிப்ரவரி 5 ம் தேதி பித்அத் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இறைத்தூதரின் போதனைகளை முஸ்லிம்கள் புறக்கணித்து வாழ்ந்து வருகின்றனர்.முஸ்லிம்களிடம் மண்டிக் கிடக்கும் அனாச்சாரங்களையும், மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட புதுமைகளையும் முழுமையாக கலைந்திட நம்முடைய பிரச்சாரக் களத்தை வீரியப்படுத்த வேண்டும்.
இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் பட்டி தொட்டி எங்கும் இந்த பிரச்சாரத்தை வீரியமாக கொண்டு செல்ல இச்செயற்குழு வாயிலாக உறுதி ஏற்போம்.
6. முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று சொன்னார்.
அண்ணாவின் 113ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நீண்டகாலம் சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை கைதிகளை மனிதநேய அடிப்படையில் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்து வெளிவந்த அரசாணையில் முஸ்லிம்கள் விடுதலை கேள்விக்குறியானதை தொடர்ந்து, நீதிபதி ஆதிநாதன் தலைமையில் காலம் நிர்ணயிக்கப் படாமல் கமிஷன் ஒன்று அமைக்கபட்டது.முஸ்லிம் சமுதாயம் நீதிபதி ஆதிநாதன் கமிஷன் அறிக்கையை எதிர்பார்த்து காத்துக் கிடக்கிறது. நீதிபதி ஆதிநாதன் அவர்களின் அறிக்கையிலும் முஸ்லிம்கள் விடுதலையில் மத ரீதியான பாரபட்சம் தொடர்ந்தால், தமிழகமே கண்டிராத மக்கள் திரள் ஆர்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்நின்று நடத்தும் என்பதை இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
7. இராஜஸ்தானில் வன்முறை
இராஜஸ்தான் மாநிலத்தின் கரோலி என்ற பகுதியில் ஹிந்து சேனா என்கிற இந்துத்துவ அமைப்பு முஸ்லிம்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பின்பு ஏற்பட்ட வன்முறையின் விளைவாக காவல்துறையினரின் துணையோடு இந்துத்துவ வெறியர்கள் 40க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளனர்.
பல வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. கொடுங் காயங்கள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்துத்துவ வகையறாக்களின் இந்த தேசவிரோதச் செயலை இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதுடன் வன்முறை வெறியாட்டம் ஆடிய கயவர்களை கைது செய்து சிறைக் கொட்டத்தில் அடைத்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டும் படி ஆளும் காங்கிரஸ் அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.
8. தமிழகத்தில் இட ஒதுக்கீடு
கடந்த ஆட்சி காலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். அவர் வாழும் காலம் வரை அதற்கான எந்த முன்னெடுப்பையும் அவர் செய்யவில்லை. அவரின் மறைவிற்கு பிறகு அதிமுகவினர் பாஜகவின் அடிமைகளாக மாறி விட்டனர்
சிறுபான்மையினரான முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே தமிழக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமுதாயத்தின் மொத்த வாக்குகளையும் பெற்று ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 3.5% இடஒதுக்கீட்டை 7% ஆக அதிகரித்து முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
9. வெள்ளை அறிக்கை
இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பது இன்று வரை முழுமையாக பல துறைகளில் கொடுக்கப்படவில்லை. சுதந்திரத்திற்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு சென்னை மாகாணத்தில் இருந்து வந்த நிலை மாறி இன்று தங்கள் சதவீதத்திற்கும் மிகக்குறைவாகவே ஒவ்வொரு அரசுத்துறையிலும், அதிகாரத்திலும் இஸ்லாமியர்கள் உள்ளனர். கல்வி , வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன என்பதை அறியும் வகையில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இம்மாநில செயற்குழு வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
10. புதுவையில் இட ஒதுக்கீடு
பாண்டிச்சேரி மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு 6.1 சதவீத விழுக்காடு இடஒதுக்கீட்டு கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்ற படாமல் உள்ளது. உடனடியாக அதை நிறைவேற்றி தரும்படி பாண்டிச்சேரி அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கின்றது.
11. சி.ஏ.ஏ
இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் , இந்திய நாடு சுதந்திரம் பெறுவதற்கும் இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அந்நியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாசிச பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டுவந்தது. இதை இந்தியர்கள் யாருமே ஏற்கவில்லை. ஆளும் ஒன்றிய பாசிச பாஜக அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசு முயன்றால் இச்சட்டத்திற்கு எதிராக தேசம் தழுவிய பலகட்ட போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னின்று நடத்தும் என்பதை இம்மாநில செயற்குழு வாயிலாக தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு.
ஆர். அப்துல்கரீம்.
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
No comments:
Post a Comment