Monday, April 11, 2022

ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – கண்டு கொள்ளாத அரசுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


தேதி: 11/04/2022


இறைவனின் திருப்பெயரால்….


ராம நவமி ஊர்வலத்தில் கலவரம் – கண்டு கொள்ளாத அரசுகள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


ராம நவமி ஊர்வலத்தின் போது மத்தியப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களில் கலவரம் நடந்துள்ளது. 


மத்திய பிரதேசத்தில்  20க்கும் மேற்பட்ட வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதம் இருப்பவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 


குஜராத் மாநிலத்தில் ஆனந்த் மாவட்டத்தில் கம்பத், சபர்கந்த் மாவட்டங்களில் ராம நவமி ஊர்வலங்களில் கல்வீச்சு சம்பவங்கள், தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசிக் கலைத்துள்ளனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் லோஹர்டகா பகுதியில் ராம நவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். லோஹர்டக் பகுதி முழுமையும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.


மேற்கு வங்கத்தில் ஹவுரா மாவட்டத்தில் சிவ்பூர் பகுதியில் மோதல் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். போலீசார் அங்குக் குவிக்கப்பட்டு பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.


மத்தியப் பிரதேசம் கர்கோன் மாவட்ட கலெக்டர் அனுகிரஹா செய்தி யாளர்களிடம் கூறும் போது கார்கோன் பகுதியில் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எட்டாம் வகுப்பு முதல் இளங்கலை மற்றும் முதுகலை தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இது திட்டமிடப் பட்ட கலவரம் தான் என்பதை நிகழ்வுகளை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது. தீவைத்தல், கல்லெறிதல், ஆயுதங்களை கொண்டு தாக்குவது என்பது திடிரென்று ஏற்படுவதில்லை.


இந்த ஊர்வலங்களுக்கு முன்பே இப்படி நடக்க உள்ளதை மாநில அரசுகள் கணித்து இது குறித்து உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து இருந்தால் இது போன்ற கலவரங்கள் தவிர்த்திருக்கலாம்.சில உயிரிழப்புகளும் தவிர்க்கப் பட்டிருக்கும்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிய மாநில அரசுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. வழக்கை முடிக்க அப்பாவிகள் மீது குற்றம் சுமத்தி விடாமல், இந்த கலவரத்திற்கு காரணமாக இருந்த உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.



இப்படிக்கு, 


ஆர். அப்துல்கரீம்,


பொதுச்செயலாளர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment