Saturday, March 5, 2022

மேயரை வணக்கத்திற்குரியவர் என அழையுங்கள்!அமைச்சரின் உத்தரவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

சுற்றறிக்கை : 28/2022

தேதி: 05/03/2022


இறைவனின் திருப்பெயரால்... 


மேயரை வணக்கத்திற்குரியவர் என அழையுங்கள்!அமைச்சரின் உத்தரவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்


தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மேயரை வணக்கத்திற்குரிய மேயர் என அழைக்க வேண்டும் என கூறியுள்ளார். 


அத்துடன் தமிழக அரசு இதை முறையாக அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.


2014 ஆம் ஆண்டிற்கு முன்பு  வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கும்  நடைமுறை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது.  அப்போதும் அதை தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கத் தவறவில்லை. 


2014 ஆம் ஆண்டில் இந்த நடைமுறையை மாற்றி மாண்புமிகு மேயர் என அழைக்குமாறு அதிமுக தலைமையிலான தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 


தற்போது அதை மாற்றி மீண்டும் வணக்கத்திற்குரிய மேயர் என்ற விரும்பத்தகாத நடைமுறையை மீண்டும் கொண்டு வருவது தேவையற்ற ஒன்றாகும். 


ஏக இறைவனை தவிர்த்து எவரையும் வணக்கத்திற்குரியவர்களாக எடுத்து கொள்ள கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். 


இந்நிலையில் மேயரை வணக்கத்திற்குரியவர் என அழைக்க வேண்டும் என்ற உத்தரவு இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளது.


வணக்கத்திற்குரிய கடவுளே இல்லை  என்ற சித்தாந்தத்தின் படி வாழ்ந்த அண்ணா, கருணாநிதி போன்றோர் வழியில் பயணிப்பதாக சொல்லக்கூடிய திமுகவினர் ஒரு மனிதரை வணக்கத்திற்குரியவர் என்று அழைப்பது ஒருவிதத்தில் அவர்களின் கோட்பாட்டிற்கே எதிரான நிலைப்பாடாகும்.


ஒரு மனிதன் என்றும் வணக்கத்திற்குரியவனாக ஆக முடியாது.


இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மாண்புமிகு என்று அழைக்கும் பழைய நடைமுறையே தொடர வழிவகை செய்ய வேண்டும். 


தமிழக அரசின் இந்த புதிய உத்தரவால்  அவசியமற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதையும் தமிழக அரசு புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.


இப்படிக்கு,

ஆர்.  அப்துல் கரீம். 

பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

No comments:

Post a Comment