Pages

Monday, May 16, 2022

கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

 கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க உத்தரவு - 1991 வழிப்பாட்டுத் தலங்கள் தொடர்பான சட்டத்திற்கு மாற்றமாக மீண்டும் ஒரு அராஜகம் அரங்கேறுகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்.


பாபர் மஸ்ஜிதை போலவே நீதிமன்றம் மூலமாக வாரணாசி கியான்வாபி மசூதியையும் பறிக்க சங்பரிவார சிந்தனை கொண்டவர்கள் திட்டமிட்டுள்ளனர். 


அதற்காகவே தொடர்ச்சியாக நம்பிக்கையின் அடிப்படையில் வழக்குகளை தொடர்ந்து வருகின்றனர். மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


விஜய் சங்கர் ரஸ்தோகி என்ற வழக்கறிஞர் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் சுயம்பு ஜோதிர்லிங்கா பகவான் விஸ்வேஸ்வர் சார்பாக ஒரு மனுவை தாக்கல் செய்கின்றார். அதில் கியான்வாபி மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டதா? என்று உண்மையைக் கண்டறிய அப்பள்ளி அமைந்திருக்கும் பகுதியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார்.


சுபாஷ் நந்தன் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வளாகத்தில் உள்ள ஒரு கிணற்றில் சிவலிங்கம் இருந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்.


வாரணாசியில் உள்ள நீதிமன்றம் கியான்வாபி மசூதியின் கட்டமைப்பை விசாரிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 


கியான்வாபி மசூதிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இடையில் உள்ள மேற்கு பக்க சுவரின் வெளிப்புறத்தில் சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்திருக்கின்றது. இதை, காசி விஸ்வநாதர் கோயிலின் முக்தி மண்டபத்தில் இருந்தபடி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தரிசிக்க முடியும். இந்நிலையில், அம்மனை தினமும் தரிசிக்க அனுமதி கோரி ராக்கி சிங், மஞ்சு வியாஸ், சீதா சாஹு, லட்சுமி தேவி,  ரேகா பத்தா ஆகிய ஐந்து பெண்கள் மூலமாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.


மசூதி வளாகத்தில் இந்து மத வழிபாட்டுச் சின்னங்கள் இருப்பதாகக் கூறப்படுவதில் உள்ள உண்மையைக் கண்டறிய கியான்வாபி மஸ்ஜிதை கள ஆய்வு நடத்த குழு அமைத்தது நீதிமன்றம்.


பாபர் மசூதி விஷயத்தில் நீதியை எதிர்பார்த்து காத்திருந்த முஸ்லிம்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாக வைத்து பாபர் மசூதி முஸ்லீம்களிடமிருந்து அநியாயமாக பறிக்கப்பட்டது.  அதே நிலை கியான்வாபி மசூதியில் ஏற்பட்டு விடக்கூடாது என்று முஸ்லிம்கள் தொடர் சட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் கியான்வாபி மசூதிக்கு சீல் வைக்க நீதிமன்றமே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. 


1991 வழிபாட்டு தலங்கள் சட்டம், (The Places Of Worship Act, 1991), பாபர் மசூதி - ராம ஜென்ம பூமி  நிலப்பிரச்சினை தவிர்த்து, 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் வழிப்பாட்டுத் தலங்கள் எவ்வாறு இருந்ததோ அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும், 15 ஆகஸ்டு 1947 க்கு முன்னர் வழிபாட்டுத் தலத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து வழக்காட முடியாது என்றும் இச்சட்டம் கூறுகிறது.


ஆக்கிரமிக்கப் பட்ட இடமாக இருந்தால் கூட வழக்கு தொடுக்க சட்டத்தில் இடம் இல்லை. ஆனால் இது ஆக்கிரமிக்கப் பட்ட இடம் இல்லை என்று தெளிவாக தெரிந்தும் மத மோதலை ஏற்படுத்த வேண்டும் என்று சங் பரிவார சிந்தனை கொண்டவர்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர்.


மத நல்லிணக்கத்தோடு வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மத வெறி அரசியல் நடத்தும் சங் பரிவார சிந்தனை கொண்டவர்களின் இந்த முயற்சிகளுக்கு நீதித்துறை தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே இந்தியர்களின் எண்ணமாக உள்ளது. 


இப்படிக்கு


ஆர். அப்துல் கரீம்.


பொதுச் செயலாளர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

No comments:

Post a Comment