பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
பராஅத் இரவு உண்டா?
ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான புது வணக்கங்களை சிலர் செய்து வருகிறார்கள்.
இந்த இரவு சிறப்புமிக்க இரவு என்பதற்கு கீழே நாம் எடுத்துக்காட்டும் செய்திகளை ஆதாரங்களாக எடுத்துக் காட்டுகின்றனர்.
முதல் ஆதாரம்: தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! பாக்கியம் நிறைந்த இரவில் இதை நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராக இருக்கிறோம். அதில் தான் உறுதி செய்யப்பட்ட ஒவ்வொரு செயல்திட்டமும் பிரிக்கப்படுகின்றது.
திருக்குர்ஆன் 44:2-4
இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு பராஅத் இரவு தான் என்பது இவர்களின் முதல் ஆதாரமாகும்.
பாக்கியமுள்ள இரவு என்று அல்லாஹ் ஒரு இரவைக் குறிப்பிட்டால் நிச்சயம் அது பாக்கியமிக்கது தான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை, ஆனால் பாக்கியமிக்க இரவு என்பது ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பாக்கியமிக்க இரவு என்று அல்லாஹ் கூறும் போது அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்கிறான்.
இந்த இரவில் திருக்குர்ஆனை நாம் இறக்கினோம் என்பது தான் அந்தக் காரணமாகும். எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டதோ அந்த இரவைத் தான் இவ்வசனம் குறிப்பிடுகிறது. எந்த இரவில் குர்ஆன் அருளப்பட்டது என்பதை நாம் திருக்குர்ஆனில் தேடிப் பார்த்தால் அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு என்று அறிந்து கொள்ளலாம்.
ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் வழிகாட்டியாகவும் நேர்வழி மற்றும் (உண்மை, பொய்யைப்) பிரித்தறிவிப்பதின் தெளிவான சான்றுகளைக் கொண்டாதாகவும் இந்தக் குர்ஆன் அருளப்பட்டது.
திருக்குர்ஆன் 2:185
இ(வ் வேதத்தை) மதிப்புமிக்க இரவில் இறக்கினோம்
திருக்குர்ஆன் 97:1
அந்த இரவு ரமலான் மாதத்தில் உள்ள லைலத்துல் கத்ர் இரவு தான் என்று இவ்வசனங்கள் மூலம் அல்லாஹ் விளக்கம் கொடுத்து விட்டான். பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல் கத்ரைத் தான் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும் வசனத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.
இரண்டாம் ஆதாரம்: ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவமன்னிப்புத் தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களைப் போக்குகின்றேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அலீ (ரலி) நூல்.இப்னுமாஜா
இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இப்னு அபீ ஸப்ரா என்பவர் வழியாக இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது இயற்பெயர் அபு பக்ர் பின் அப்துல்லாஹ் பின் முஹம்மது அபி புஸ்ரா” ஆகும்.
இவர் ஹதீஸ்கள் என்ற பெயரால் இட்டுக்கட்டிக் கூறுபவர் என அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறியுள்ளார்கள். புகாரி அவர்கள் இந்த அறிவிப்பாளரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். அபூபக்கர் என்பார் பலவீனமானவர் என்று நஸாயி அவர்கள் அல்லுஅஃபாஉ வல் வல்மத்ருகீன் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் எனவே இந்த ஹதீஸ் பொய்யான ஹதீஸாகும்.
மூன்றாம் ஆதாரம்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீவு என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கலப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதி
இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதை இதைப் பதிவு செய்த திர்மிதீ அவர்களே விளக்கியுள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வா என்பார் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் யஹ்யா பின் அபீ கஸீர் என்பார் உர்வாவிடம் எதையும் செவியுற்றதில்லை என்று புகாரி இமாம் கூறுகிறார். மேலும் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பார் இதை யஹ்யா பின் அபீ கஸீர் வழியாக அறிவிப்பதாக இதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஹஜ்ஜாஜ் என்பார் யஹ்யா பின் அபீ கஸீரிடம் எதையும் செவியுறவில்லை. எனவே இது பலவீனமான ஹதீஸ் என்று புகாரி இமாம் கூறுகிறார். இந்த விபரத்தை இந்த ஹதீஸின் இறுதியில் திர்மிதி அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
நான்காவது ஆதாரம்: ரமலான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ, நூல் : ஃபலாயிலு ரமலான் – இப்னு அபித் துன்யா
முஹம்மத் பின்அலீ என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவர் அல்ல. எனவே இச்செய்தியும் பலவீனமான செய்தியாகும். மேலும் பராஅத் இரவு குறித்து எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.
மேலும் இந்த இரவில் மூன்று தடவை யாஸீன் அத்தியாயம் ஓத வேண்டும்; முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாவது யாஸீன் மரணித்தவர்களுக்கு நன்மை சேர்க்கவும், மூன்றாவது யாஸீன் நீண்ட ஆயுளுக்காகவும் என்று ஓதுகின்றனர். இப்படி ஓத வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. இது போலி ஆலிம்கள் வீடுகளுக்குப் போய் சம்பாதிப்பதற்காக உருவாக்கிய பொய் வணக்கமாகும். ஷஅபான் மாதம் 15 ஆம் இரவில் நோன்பு நோற்பதும் பித்அத்தாகும்.
பராஅத்தும் மத்ஹபுகளும்
மத்ஹப் இமாம்களை பின்பற்றுகிறோம் என்று கூறிக்கொள்வோர், அந்த மத்ஹப் இமாம்களே ஷபே பராஅத் சம்பந்தமாக கடுமையாக விமர்சித்துள்ளதை சிந்திக்கவேண்டும்.
இமாம் ஷாஃபியீ அவர்கள்
ﻭﻣﻦ اﻟﺒﺪﻉ اﻟﻤﺬﻣﻮﻣﺔ اﻟﺘﻲ ﻳﺄﺛﻢ ﻓﺎﻋﻠﻬﺎ ﻭﻳﺠﺐ ﻋﻠﻰ ﻭﻻﺓ اﻷﻣﺮ ﻣﻨﻊ ﻓﺎﻋﻠﻬﺎ: ﺻﻼﺓ اﻟﺮﻏﺎﺋﺐ اﺛﻨﺘﺎ ﻋﺸﺮﺓ ﺭﻛﻌﺔ ﺑﻴﻦ اﻟﻌﺸﺎءﻳﻦ ﻟﻴﻠﺔ ﺃﻭﻝ ﺟﻤﻌﺔ ﻣﻦ ﺭﺟﺐ.
ﻭﺻﻼﺓ ﻟﻴﻠﺔ ﻧﺼﻒ ﺷﻌﺒﺎﻥ ﻣﺎﺋﺔ ﺭﻛﻌﺔ
ரஜப் மாதத்தின் முதல் ஜுமுஆ வின் இரவில் மஃரிப் இஷாத் தொழுகைக்கு இடையில் ஸலாத்துர் ரகாயிப் என்ற 12 ரக்அத்கள் தொழுவதும் ஷஃபான் 15 ஆம் இரவில் 100ரக்அத்கள் தொழுவதும் பழிக்கப்பட்ட மார்க்கத்தில் இல்லாத பித்அத்களாகும். அதனை செய்பவர் பாவி. அதனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும்.
(நூல்: இஆனதுத் தாலிபீன் 1பாகம் :312பக்கம்)
فائدة : أما الصلاة المعروفة ليلة الرغائب وليلة شعبان يوم عاشوراء بدعة قبيحة وأحاديثها موضوعة
(ரஜப்) மாதத்தின்) ரகாயிப் இரவு ஷஃபான் இரவு ஆஷுரா நாள் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டு தொழுகைகளை தொழுவது மிக மோசமான பித்அத்தாகும்
(நூல் : ஃபத்ஹுல் முயீன் பாகம்1 : பக்கம்270
ஹனஃபீ மத்ஹப்
اسراج السراج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد
பராஅத் இரவில் தெருக்களிலும் கடைவீதிகளிலும் அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமாக விளக்குகளை எரிப்பது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தாகும்.
(நூல்: அல் பஹ்ருர் ராயிக் பாகம்5: பக்கம் 232)
இவ்வாறு இமாம்களே அன்றைக்கே இது போன்ற பித்அத்களை கடுமையாக கண்டித்துள்ளனர். என்பதை இதிலிருந்து அறியலாம். மேலும் மக்களை மத்ஹபை பின்பற்ற வேண்டும் என எதைக்கொண்டு போதிக்கின்றார்களோ, அந்த மத்ஹப் கிரந்தங்களில் தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
நபிகளாரின் எச்சரிக்கை!
நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் ஒருவர் புதிதாக உருவாக்குகிறாரோ அது ரத்து செய்யப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697
நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) – நூல் : முஸ்லிம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்கு மதிப்பளித்து அவர்கள் காட்டித்தராமால் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட பராஅத் வணக்கங்களை விட்டொழிப்போமாக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
மாநில தலைமையகம்.